மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் மண்வெட்டியால் தாக்கி தொழிலாளி கொலை
கணவன் மனைவி கைது
பொள்ளாச்சி அருகே தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்து புதைத்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை காளியாபுரம் மாட்டையன் கோயில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் யாரோ ஒருவர் புதைக்கப்பட்டு இருப்பதாகவும், கை மட்டும் வெளியே தெரிவதாகவும் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒரு ஆண் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி முன்னிலையில் சம்பவ இடத்தில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கோவையில் இருந்து வந்திருந்த அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இறந்தவர் ஆண் என்றும், தலையின் பின் பகுதியில் வெட்டுக்காயங்கள் உள்ளன என்றும், புதைக்கப்பட்டு 4, 5 நாட்கள் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்தக் கொலையை செய்தது நாங்கள் தான் என்று காளியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தனராஜிடம் கணவன் மனைவி இருவர் ஆஜராகினர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது, ஆனைமலையை அடுத்த நரிக்கல்பதியைச் சேர்ந்தவர் சந்திரன் (48). இவரது மனைவி காளீஸ்வரி (50). இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சந்திரன், காளீஸ்வரி தம்பதியினர் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக செல்லகரடு பகுதியில் உள்ள உடுமலை பிரமிளா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இத்தம்பதியினர் தங்கள் மருமகனின் நண்பரான கோட்டூர் மன்னம் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் கருப்புசாமி (45) என்பவரிடம் வேறு தோட்டங்களில் வேலை இருந்தால் சொல்லும்படி கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருப்புசாமி அடிக்கடி காளீஸ்வரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் அவ்வப்போது காளீஸ்வரியிடம் தவறான முறையிலும் பேசி உள்ளார். இது தெரிந்ததும் சந்திரன், கருப்பசாமியை கண்டித்துள்ளார். ஆனாலும் கருப்புசாமி தொடர்ந்து பேசி உள்ளார்.
இதனால் சந்திரனும் அவரது மனைவி காலிஸ்வரியும் திட்டமிட்டு கடந்த 28ம் தேதி கருப்புசாமியை தங்கள் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு சந்திரனும் கருப்புசாமியும் மது அருந்தி உள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்திரன் மண்வெட்டியால், கருப்புசாமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்புசாமி இறந்துவிட்டார். சந்திரன், காளீஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து தோட்டத்தின் ஒரு பகுதியில் கருப்புசாமியின் உடலை புதைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், தம்பதியர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளனர். தற்போது இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.
Comments
Post a Comment