மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் போதை மாத்திரைகள் சப்ளை ஐவர் கைது
தமிழகத்தின் பல்வேறு. பகுதிகளிலும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் போலீசார் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் போலீசாரின் கண்காணிப்பில் பொள்ளாச்சியில் போதைப்பொருள் பயன்படுத்திய ஐந்து நபர்களை கைது செய்தனர்.கோவை பகுதி சேர்ந்த ஆகாஷ் (26),கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நவீன் நேரு (24),பிரபு (29) சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் (24) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுருட்டை ஹரி என்கின்ற ஹரிபிரசாத் (27) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேற்று மாநிலங்களில் இருந்து மருத்துவ பயன்பாட்டிற்கு என வலி நிவாரண மாத்திரைகளை மொத்த விற்பனைக்கு சில ஏஜென்ட்கள் மூலம் வாங்கி கொரியர் வசதியை பயன்படுத்தி மாத்திரைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும், இந்த வலி நிவாரண மாத்திரைகளை பல்வேறு மூலக்கூறுகள் மூலம் மாற்றி அமைத்து, வேற்று ரசாயனங்களை பயன்படுத்தி, வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி போதை பொருளாக மாற்றுவதாக கூறப்படுகிறது. மேலும் இதனை மாத்திரை வடிவத்திலும் , ஊசி நுண் குழாய்கள் மூலம் உடலுக்குள் உட் செலுத்தும் திரவ வடிவிலும் போதைப் பொருளாக உருவகப்படுத்தி மார்க்கெட்டுக்கு சப்ளைக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.இந்த கும்பல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரை குறி வைத்து, போதை பொருள் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.மேலும் நாடு முழுவதும் இந்த போதை வஸ்துக்கள் பல்வேறு ஏஜென்ட்கள் மூலமாகவும், போதை பொருளை பயன்படுத்தும் நுகர்வோர் மூலமாகவும் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வதாகக் கூறப்படுகிறது. போதை பொருளின் அளவைப் பொறுத்து சிறிய முதல் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.தற்போது கைது செய்யப்பட்ட ஐவரிடமிருந்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment