மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி கிளை சிறையில்
மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கோவை மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொள்ளாச்சி கிளை சிறையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் பொள்ளாச்சி கிளைச் சிறையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சிறையில் இருக்கும் சிறை கைதிகளிடம், முறையாக உணவு வழங்கப்படுகிறதா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
கிளைச் சிறையில் உள்ள சமையலறை, நூலகம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கோவை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளரிடம் கூறுகையில், பொள்ளாச்சி கிளை சிறையில் கைதிகளை எவ்வாறு நடத்துகிறார்கள், ஜாதி பெயர்கள் கூறியோ அல்லது வேறு விதமாக அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்களா, ஏதேனும் காரணங்களுக்காக தனிமைப்படுத்தப் படுகிறார்களா என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தோம்.
மேலும் கைதிகளுக்கு உணவு, மருத்துவ பரிசோதனை முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தோம். பொள்ளாச்சி கிளைச்சிறைக்கு புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது பொள்ளாச்சி கிளைச் சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர் .
Comments
Post a Comment