மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம்
679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட ஆறு காவல் உட்கோட்டங்களிலும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது
மொத்தம் 679 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், 518 மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. 161 மனுக்கள் மேல்நிலை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட மனுக்களும் பெறப்பட்டன
முகாமில் மாவட்ட இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வழிகாட்டலுடன் சட்ட ஆலோசகரும் பிற துறை அதிகாரிகளும் பங்கேற்றனர் குறிப்பாக கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று மனுதாரர்களிடம் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் மக்கள் தங்கள் குறைகளை பிற வேலை நாட்களில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்
இம்முறை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம், பொது மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது
Comments
Post a Comment