மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா – நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு வாகனங்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கு.சண்முகசுந்தரம் எம்.பி தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா – நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, இந்துஸ்தான் கல்லூரி ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா – கேண்டர் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, பரா ஒலிம்பிக் அசோசியன் தலைவர் ஷர்மிளா, இந்துஸ்தான் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் முனைவர்.லோகநாதன், கணிதவியல் துறை தலைவர் முனைவர். ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா – நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு வாகனங்கள் , ரங்கம்மாள் பள்ளி, சிஎஸ்ஐ மெட்ரிக் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்மலா கல்லூரி, இராமநாதபுரம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டிரினிட்டி பள்ளி, அல்வேனியா மெட்ரிக் பள்ளி, சபர்பன் பள்ளி, சபர்பன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி , அரசினர் மகளிர் பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி டெக் கல்லூரி, பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சர்வஜன பள்ளி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய கல்லூரி / பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா – நிகழ்ச்சி தொடர்பாக பள்ளி /கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகள், கேலோ சின்னம் (லோகோ) வரைதல் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி - உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்ததாவது,
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டுப்போட்டிகள் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது.
தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023- தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடத்திட முடிவுசெய்யபட்டுள்ளது.கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் 28 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் சென்னையில் தடகளம் கால்பந்து குத்துச்சண்டை வாள்வீச்சு, வாலிபால் பளு தூக்குதல் ஸ்குவாஷ் வில்வித்தை, ஜூடோ.. டேபிள் டென்னீஸ் பேட்மிடன் சைக்கிள் ஒட்டுதல், யோகாசனம் மல்யுத்தம் ஹாக்கி, நீச்சல், ஐம்னாஸ்டிக் ,டென்னீஸ் ,துப்பாக்கி சுடுதல், கபடி மற்றும் சிலம்பம் (டேமோ) நடைபெறவுள்ளது. மதுரையில் கோ-கோ சுட்கா விளையாட்டுப் போட்டியும், திருச்சியல் மல்லக்கம்பு களரிப்பட்டு விளையாட்டுப் போட்டியும், கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து, தாங் தா விளையாட்டுப்போட்டியும் நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக 22.12.2023 அன்று சென்னையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் கேலோ இந்தியா லோகோ - தீம் சாங் மற்றும் கேலோ டார்ச் வெளியிட்டு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 18 வயதிற்குட்பட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடு முழுவதும் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வு 1600க்கும் மேற்பட்ட தனிநபர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள துணை ஊழியர்களால் நிர்வகிக்கப்படவுள்ளது. மேலும் மாநிலத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது இந்த நிகழ்வு தேசிய தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்.
தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளம்பரம் மற்றும் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதைக் கருத்தில் கொண்டு 06.01.2023 அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் துவக்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட பாதை மற்றும் காலம் ஆகியவற்றில் பயணித்து மீண்டும் சென்னையை சென்றடையும்.
கோவை மாவட்டத்தில் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேண்டர் டார்ச் விழா கோவை மாவட்டத்திற்கு வரும் முன்னரே பள்ளி கல்லூரி மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட ரேஸ் கோர்ஸ் பகுதியில் லைட் செட்டிங் மூலம் 31.12.2023 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி /கல்லூரியில் திருக்குறள் போட்டிகள் நடத்துவது, கேலோ சின்னம் (லோகோ) வரைதல் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி எதிர்காலம் இங்கே இந்தியாவின் விளையாட்டு தமிழ்நாடு) பேச்சுப்போட்டி - வீர மங்கை வேலு நாச்சியார் போட்டிகள் 04.01.2024 அன்று நடத்தப்பட்டுள்ளது. பி.எஸ்ஜி மருத்துவ கல்லூரி உள் விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி ஜனவரி 21 முதல் 25 வரையும் மற்றும் தாங் தா விளையாட்டு போட்டிகள் ஜனவரி 28 முதல் வரை 30 நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளார். இது நம்மாவட்டத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும். விளையாட்டு போட்டிகளில் விளையாடுபவர்களை உற்சாகத்தைப்படுத்த வேண்டும். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்குகளில் நடைபெறவுள்ளது. அதில் நம்முடைய கோவை மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் வருகை தருவார்கள். அவர்களுக்கு நன்றாக வரவேற்பு அளித்து, விளையாடும் அவர்களை உற்சாகபடுத்தும் போதும், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் நாங்கள் கோவைக்கு விளையாட சென்றோம் அங்கு எங்களை நன்றாக உற்சாகப் படுத்தினார்கள், அங்கு விளையாடியது மிக அருமையாக இருந்தது என்று கூறுவார்கள். அது நம் தமிழ்நாட்டிற்கும், நம் கோவைக்கும் பெருமையாக அமையும்.
Comments
Post a Comment