மக்கள் வெளிச்சம் நாளிதழ்
டாப்சிலிப்பில் யானைகள்
பொங்கல் விழா
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி:-ஜன-17வனத்துறை சார்பில் டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானைகள் பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 9 பெண் யானைகள் உட்பட 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி யானைகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு யானைகள் பொங்கல் விழா பார்கவதேவ் தலைமையில் நடைபெற்றது. டாப்சிலிப் வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோழிக்கமுத்தியில் மலைவாழ்மக்கள் சார்பில் 9 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பிறகு பொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய், பழம் ஆகியவை வாழை இலையில் படையலிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு வழங்கப்பட்டன. விழாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
வழக்கமாக டாப்சிலிப்பில் நடத்தப்படும் யானைகள் பொங்கல் விழா கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் கோழிக்கமுத்தியில் நடத்தப்பட்டதால், அனைவரும் கலந்து கொள்ள முடியவில்லை என சுற்றுலா பயணிகள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
Comments
Post a Comment