மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
கோவை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
எஸ்.என்.ஆர் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து,
காந்திபுரத்தில் நடைபெறும் அரசுவிழாவில் ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தகவல்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 18.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு ஆவாரம்பாளையம், எஸ்.என்.ஆர் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து, காந்திபுரத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் அரசுவிழாவில் செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 27, 28க்குட்பட்ட பகுதிகளுக்கு ஆவாரம்பாளையம், எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் தமிழக முதல்வரால் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாமினை மாநிலஅளவில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 18.12.2023 அன்று முதல் 06.01.2024 வரை மொத்தம் 137 பகுதிகளில் காலை 10.00மணி முதல் மதியம் 3.00மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய 13அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 52 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
அடிக்கல் நாட்டும் திட்டப் பணி - கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் முதற்கட்டமாக ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார்கள்.
அரசு நலத்திட்ட உதவிகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை(சத்துணவு), கூட்டுறவுத் துறை, பேரூராட்சிகள், கோவை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பட்டுவளர்ச்சித்துறை, தாட்கோஉள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்கள்.
இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment