மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை இந்துஸ்தான் கல்லூரி, மற்றும் பள்ளிகளில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிறப்புரை
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்டம், நவஇந்தியா, அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் விழாக் குழு சார்பில் தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், இணைச் செயலாளர்கள் சாந்தி, வி.பூபாலன், தலைமை அலுவலர் உமாராணி, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக், யு.கே.வெள்ளியங்கிரி, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன், மண்டலக்குழுத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள் வித்யா, சரவணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரபாலமுரளி, அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் விழாக் குழுவின் கருத்தரங்கில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கொங்கு நாடு கலைஅறிவியல் கல்லூரி மாணவர் செல்வன்.கௌரிசங்கருக்கு முதல் பரிசும், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் முத்துச்செல்வனுக்கு இரண்டாம் பரிசும், புலியகுளம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி ஐஸ்வர்யாவுக்கு மூன்றாம் பரிசும், இந்துஸ்தான் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் நந்தகுமாருக்கு நான்காம் பரிசும், பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் பகுவிக்ரமுக்கு ஐந்தாம் பரிசும் மற்றும் வெற்றிபெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
மேலும், சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் விழாக் குழுவின் கருத்தரங்கில் நடைபெற்ற பேச்சு போட்டியில் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ்.தேவதர்ஷினிக்கு முதல் பரிசும், இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.தனலெட்சுமிக்கு இரண்டாம் பரிசும், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆர்.கீதாக்கு மூன்றாம் பரிசும், ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.சபரிகிரிக்கு நான்காம் பரிசும், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி(மகளிர்) மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜீவிதாக்கு ஐந்தாம் பரிசும், மற்றும் வெற்றிபெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
இக்கருத்தரங்கில் தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது,
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதெற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான சட்டமன்ற நாயகர்-கலைஞர்” என்ற குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
அந்த காலத்தில் பெண்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்விவரை பயில்கின்றனர். அதற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகள் தான் காரணமாகும். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார்கள். இதனால் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியாவில் உயர்கல்வி படிப்பவர்கள் 27 சதவீதம் ஆனால், தமிழ்நாட்டில் 82 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கிறார்கள்.
அதன்தொடர்ச்சியாக நம்முடைய தமிழக முதல்வர் அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்கள் திட்டத்தை கொண்டு வந்தார்கள். பெருந்தலைவர் காமராசர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். கல்விக்கண் திறந்தவர் என போற்றப்படுகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரி கட்டணமில்லாமல் கல்வி கற்கலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். இது போன்ற திட்டங்களால்தான் தமிழ்நாடு உயர்கல்வி பயில்வதில் இந்தியாவிலே முதலிடம் பெற்றுள்ளது.
தாய்மார்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலிஷ் கற்றுத்தரப்படுகிறது. கலைஞர் அவர்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான பாடத்திட்டங்களை அரசு பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கொண்டு வந்தார்கள். நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் விழாக்குழு கருத்தரங்குகளில் கலைஞரின் சாதனைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது,
கலைஞர் ஒரு பெரிய சாதனையாளர். உலக மகா சாதனையாளர். ஏறக்குறைய இரண்டரை இலட்சம் பக்கங்களை எழுதி சாதனை புரிந்து இருக்கிறார்கள். அவருக்கு தெரியாத இலக்கிய பிரிவே இல்லை. பலதுறைகளில் வரலாற்று சாதனையினை படைத்துள்ளார் என்பது உண்மை. 1900 ஆண்டுகளில் பெண்கள் கல்வி பெறவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து பெண்களும் கல்வி கற்கின்றனர். இக்குழுவின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் 50 சதவீதம் மாணவியர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
நம் நாட்டின் சுதந்திரம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியை நமக்கு வழங்கி இருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த கல்விநிலையங்களை விரல்களில் எண்ணிவிடமுடியும். ஆனால் இன்று நகரங்களில் 20 முதல் 30 கல்லூரிகளுக்கு மேல் உள்ளன. பெருந்தலைவர் காமராஜர் ஆரம்ப கல்வி வழங்க ஏறக்குறைய 36,000 பள்ளிகூடங்களை திறந்து வைத்து அடித்தளம் அமைத்தார். தொடர்ந்து கலைஞர் மேல்நிலைக் கல்விக்கு மிகப்பெரிய கட்டுமானத்தை அமைத்தார். தமிழக முதல்வர் தொழிற்கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம், தமிழ்நாட்டை முதன்மையான தொழிற்கல்வி நிறைந்த மாநிலமாக மாற்றி இருக்கிறது.
கலைஞரிடம் உங்கள் பொதுவாழ்வின் நோக்கம் என்ன என கேட்டபோது, “ என்னுடைய நோக்கம் என்பது சாதியினுடைய ஆதிக்கத்தையும், மதத்தின் வெறியையும் அடித்து நொறுக்கவேண்டும் என்பதாகும்” என கூறினார். ஆகவே கலைஞர் நூற்றாண்டு விழா உங்களுக்கு சொல்கின்ற செய்தி சாதிவெறியையும் மதவெறியையும் மாய்ப்போம் என்ற எண்ணத்தில் நீங்கள் அனைவரும் இந்த அரங்கத்தை விட்டு செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.
Comments
Post a Comment