மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி ஆச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் 

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.



  காந்திஜெயந்தி தினத்தினை  முன்னிட்டு  கோவை  மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் கிராம சபை கூட்டத்தில்  பொள்ளாச்சி சார்ஆட்சியர் சி.பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஆச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.ரங்கநாதன், ஒன்றியகுழுத் உறுப்பினர் மாலினி பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் கல்யாணி, ஊராட்சி செயலர் சந்துருகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள் பஷீர் அகமது, வார்டு உறுப்பினர்கள் கல்யாணி காளிதாஸ், சி.டி.சி துரை, என்.சுரேஷ், மங்களதீபா, தேவந்திரன், செந்தில்குமார்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஸ்வச் சேவா  திட்டம் மூலம் சிறப்பாக தூய்மை பணியினை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  பொன்னாடை அணிவித்து கேடயங்களை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது,
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு  கோவை  மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்  கிராமசபை கூட்டம் நடைபெறுகின்றது.  தமிழக முதல்வர்  அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கிராமசபை மூலம்   மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எப்படி அந்த திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்பது குறித்தும் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு அறிவுரைகளை வழங்கிவுள்ளார்கள்.   
ஊரக பகுதிகளில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தவருடம் மழைபொழிவு குறைவாக இருப்பதால், வேளாண்மையும் குறைந்துள்ளது.   எனவே,  அதற்குதகுந்தாற்போல், என்னமாதிரி  பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து பணிகளை மேற்கொண்டால், அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும். 
பொது சுகாதாரம், சுற்றுசூழல் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, நகரப்பகுதிகளுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மையினை மேற்கொள்ள வேண்டும்.  எனவே, வீடுகளில் குப்பைகளை எந்தஅளவிற்கு குறைக்க முடியும், அதில் எவற்றையெல்லாம் மறுசுழற்சி செய்யமுடியும்,  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை  தவிர்க்கமுடியும் என்பதை மக்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.  மேலும், வீடுகளில் சேகரமாகும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வைத்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கவேண்டும். இவ்வாறு செய்வதனால் குப்பைகளை மறுசுழற்சி செய்வது எளிதாக இருக்கும்.
மழைக்காலம் என்பதால் டெங்குபோன்ற காய்ச்சல் வரவாய்ப்புள்ளது.  இதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கையினை ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீடுகளில் நல்ல தண்ணீர் சேகரிக்கப்படும் பயன்படுத்தும் பாத்திரங்களை முறையாக மூடி வைக்கவேண்டும். இல்லையெனில்  அவற்றில் கொசுக்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.யாருக்காவது, காய்ச்சல், இருமல் சளி இருந்தால் உடனடியாக இம்முகாம்களுக்கு சென்றால், அவர்களை பரிசோதித்து  தொடர்ந்து, சிகிச்சையினை இம்முகாம்களில் இலவசமாக வழங்குவர்கள். 
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெற்று முதற்கட்டமாக தகுதியான மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. விண்ணப்பித்த ஒருசிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இ-சேவை மையங்களில்  மேல்முறையீடு செய்ய  வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.  இ-சேவை மையங்களுக்கு சென்று எந்த காரணங்களால் உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை அந்தகாரணங்கள் சரியானதாக இல்லாமல் இருந்தால், மேல்முறையீடு செய்யலாம்.  தகுதியான மகளிர் யாரும் எங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். தகுதியான அனைவருக்கும் இத்தொகை கிடைக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை  உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களின் பெற்றோரை உள்ளடக்கிய மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால்தான் உணவு சமைக்கப்படுகிறது. அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுக்கான உணவு என்பதால் மிகுந்த அக்கறையுடன், பள்ளிகளில் மேலாண்மை குழுவில் பங்கேற்கவேண்டும். 
பள்ளிப் படிப்பை முடித்த அனைத்து மாணக்கர்களும் உயர்கல்வி படிப்பை பயிலவேண்டும். அதற்காக அரசின் சார்பில் பல்வேறு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பொள்ளாச்சியில் மாபெரும் கல்விகடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் முடிவுற்று மாணக்கர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் அவர்கள் பயன்பெறும்வகையில் வருகின்ற 05.10.2023 அன்று பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. பொருளாதார பிரச்சனையில் கல்லூரி படிப்பை படிக்க முடியாதவர்கள் கட்டாயம் இந்த முகாம்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்திருந்தால் வருகின்ற 14.10.2023 பி.ஏ பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. எனவே,  இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  பேசினார்.
முன்னதாக பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம்  செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கினார்கள்.மேலும் ஊராட்சி செயலர் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
ஊரக பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம்,  உள்ளிட்ட 14 கூட்டப் பொருட்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்