மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மனைவியை கொன்று - கணவன் தற்கொலை
லாட்டரி மோகத்தால் கூலி பணம் முழுவதையும் தொலைத்த கணவன் மனைவியை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் காளிமுத்து (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இருவரும் அதே பகுதியில் உள்ள சென்னியப்ப பிள்ளை தோட்டத்தில் தங்கி தோட்டத்து வேலைகளை செய்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கவிதாமணி திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன்
கோவையில் வசித்து வருகிறார்.
கூலி வேலை செய்து வந்த காளிமுத்து தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை லாட்டரி சீட்டு வாங்குவதிலேயே தொலைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வந்தார்.
தனியாக வசித்து வந்த காளிமுத்து சாப்பாட்டுக்கு சிரமப்பட்டதால் நேற்று முன்தினம் கோவை சென்று மனைவி ராஜேஸ்வரியை சமாதானப்படுத்தி பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அன்று இரவே கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து வீட்டிலிருந்து தலையணையை கொண்டு ராஜேஸ்வரியின் முகத்தில் வைத்து அழுத்தி அவரை கொலை செய்துள்ளார். பிறகு வீட்டில் இருந்த கயிற்றின் மூலம் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை பக்கத்து தோட்டத்தில் வேலை செய்யும் ரங்கநாதன் என்பவர் வழக்கம்போல் காளிமுத்துவின் தோட்டத்து வீட்டிற்கு சென்றபோது ராஜேஸ்வரியை கொன்று விட்டு காளிமுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது பிரேதங்களையும் மீட்டு பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment