மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு (05-08-2023) முகாம் 

அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு 


 
கோவை  மாவட்டம் அரசினர் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளத்தில் பதிவு செய்து படித்தால் வேலை  வாய்ப்பினை எளிதாக பெறலாம் என  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவை  மாவட்டம், ஜி.என் மில்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 05.08.2023 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  அமைச்சர்   தலைமையில் நடைபெற்றது.
இவ்ஆய்வின் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆணையர் கி.வீரராகவராவ்,  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன்  மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்  மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ.ஷர்மிளா, மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் மாநில துணைத் தலைவர் கனிமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி முருகேசன், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி, மீனாலோகு, தெய்வயாணை தமிழ்மறை, கதிர்வேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர்(பொ)/ மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மு.கோகிலா, மண்டல பயிற்ச்சித்துறை இணை இயக்குநர் திரு.முஸ்தபா, கோவை  அரசினர் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லீமா ரோஸ், நிலைய மேலாண்மை குழு தலைவர் நரேந்திரன், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் கருணாகரன், பேருராட்சி மன்ற தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
 தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குகின்ற வகையில் தமிழ்நாட்டில் உள்ள 102 தொழிற்பயிற்சி நிலையங்களில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டாட்டா டெக்னாலஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ரூ,2877 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன தொழில்நுட்ப மையத்தை உருவாக்கி தந்துள்ளார்கள். அண்மையில்  தமிழக முதல்வர்  அந்த தொழில்நுட்ப மையங்களை துவக்கி வைத்துள்ளார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த நிறுவனங்களில் மேலை நாடுகளில் சென்று படித்தால் என்ன தகுதி பெற முடியுமோ, பயிற்சி பெற முடியுமோ அத்தகைய சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார்கள். 
டாட்டா டெக்னாலஜி நிறுவனம் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.31 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டெக்னாலஜி நிறுவனம் இணைந்து இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி தரப்பட்டுள்ளது. கோவை  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மட்டும் சுமார் 1400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது என்பது குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான,  நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவர்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நான் முதல்வன் போர்ட்டல் இணையதளத்தை உருவாக்கி, அந்த இணையதளத்தில் என்ன படிக்கலாம், எப்படிப்பட்ட பயிற்சிகளை படிக்க வேண்டும், அதனை படிப்பதற்கான உதவித்தொகை பெறுவது எப்படி, படித்து முடித்த பிறகு எந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் இன்னும் பிற அனைத்து வகையான செய்திகளையும் அந்த இணைதளத்தில் தமிழக முதல்வர்  உருவாக்கி தந்துள்ளார்கள். 
இந்த இணையதளம் குறித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து, அதன் மூலமாக பயிற்சி பெறுவதற்கான அனைத்து  வழிவகைகளையும் செய்ய வேண்டும் என்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு கட்டாயமாக வேலை வாய்ப்பு உருவாக்கிட அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி,  பொறியியல் கல்லூரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்லூரிகளில்  படித்து முடித்த பிறகு வேலை இல்லை என்பதனை போக்குவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள்,  பொறியியல் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும்,  தமிழக முதல்வர்  திறன் மேம்பாட்டு பயிற்சியினை ஊக்குவித்து படித்து முடித்த உடனே வேலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்கள். 
கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக இளைஞர்களின் வேலையின்மையை போக்கிடும் வகையில் சிறப்பு முயற்சியாக கலைஞரின் நூற்றாண்டில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்திட வேலைவாய்ப்புத்துறை திட்டமிட்டுள்ளது. இம்முகாம்கள் 22.07.2023 முதல் 30.12.2023 வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை  மாவட்டத்தில், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 05.08.2023 அன்று நடைபெறவுள்ள முதலாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  
மேலும், 02.09.2023 அன்று இரண்டாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 02.12.2023 அன்று மூன்றாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறவுள்ளது. முதலாவது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20,000 த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு  250 க்கும் மேற்பட்ட கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 50,000 –க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்கள் சுமூகமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வேலையளிப்போர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பதிவுப் படிவங்கள், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் பல்வேறு நிறுவனங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்கள், பொது அறிவிப்பு அமைப்புகள், விளம்பர பாதாகைகள் அமைத்தல், முகாமில் பங்கேற்பதற்காக பதிவு செய்த வேலையளிப்போர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு ஆகிய பணிகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநாடுநர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு  கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் சி.வி.கணேசன்  தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்