மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சி
கோவை:-ஜூலை-17 கோவை மாவட்டம்
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ளும் பேரணி நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தகவல்
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967 ஆம் ஆண்டு) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்கள். அதன்படி, நாளை தமிழ்நாடு தினம் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவுள்ளது.அதனடிப்படையில் தமிழ்நாடு நாள் விழாவினை பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், நாளை(18.07.2023) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களின் பேரணியும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களின் பேரணியினை தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் , மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இப்புகைப்படக்கண்காட்சியானது 18.07.2023 முதல் 23.07.2023 வரை நடைபெறவுள்ளது. இப்புகைப்படக்கண்காட்சியில் சென்னை மாகாணத்தின் பழைய வரைபடம், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படவுள்ளது. எனவே, மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment