மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு
அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
கீழமை நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அப்புறப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட உத்தரவை எதிர்த்து பொள்ளாச்சியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசு, இளைஞரணி செயலாளர் தம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் காளிமுத்து பேசுகையில், கீழமை நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இருவரது படங்கள் மட்டும் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளர் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அப்படியானால் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள அம்பேத்கர் படம் நீக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள் அர்த்தம் ஆகும்.
சட்டம் மேதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவருமான அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார்.
அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே நீதிமன்றங்களில் அவரது படம் மாட்டப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கிறோம். ஆகவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விரைவில் இந்த உத்தரவை திரும்ப பெற்று அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் மாட்டப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மகளிரணி மாவட்ட செயலாளர் சாந்தி, காளீஸ்வரி, செண்பகம், ஜோதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment