மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
கோவை:-மே-18 கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பெரிய நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பத்மலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ், முத்துமணி, ஒன்றிய பொறியாளர் தாமோதரதாஸ், உதவி பொறியாளர்கள் ரகுநாதன், ஜெயராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார்கள்.
அதன்படி, இன்று பெரிய நெகமம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க நியாயவிலைக் கடையில், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
என்.சந்திராபுரம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கள்ளிப்பாளையத்துகார தோட்டத்தில் மயில்சாமி என்ற விவசாயின் நிலத்தில் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகள்நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.32.10 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி, சின்னேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும்பணி, அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.32.10 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் புளியம்பட்டி ஊராட்சியில் பத்பநாதன் வீடு முதல் நீலகண்டன் வீடுவரை ரூ.6.49 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பெரியநெகமம் பேரூராட்சி, திருமாக்காள் வீதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் மொத்தம் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் சுமார் 300 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியில் திருமாக்காள் வீதியில் உள்ள சாரதி என்பவரது வீட்டில் தறி நெசவு செய்யப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தறி நெசவு செய்ய பயன்படும் நூல், செலவு, கூலி விவரங்கள், தயாரிக்கப்படும் சேலைகள் விற்கப்படும் விவரங்கள் குறித்து நெசவாளர் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
Comments
Post a Comment