மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மாசாணியம்மன் கோவில்
குண்டம் திருவிழா
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆனைமலை:-பிப்-06 ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள்வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும்.
உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 2 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 3ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 5ம் தேதி குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று நடைபெற்றது. காலை சுமார் 6 மணியளவில் அம்மன் கலசம் உப்பாற்றில் முத்தரிக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதும் அந்த கலசத்துடன் அம்மன் அருளாளி மேள, தாளங்கள் முழங்க குண்டம் இறங்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் ரோட்டில் உள்ள மாசாணியம்மன் திருமண மண்டபத்தை ஒட்டிய பகுதியில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டத்தில் பூ வளர்த்து தயார் நிலையில் இருந்தது.
சுமார் 7 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. க்கள் ஜெயராமன், அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செ ல்வி, முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், ஆனைமலை தி. மு. க. நகர செயலாளர் டாக்டர். செந்தில்குமார், கோவில் உதவி ஆணையர் ராஜேஸ்வரி, புலவர் லோகநாதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர். குண்டம் வளாகத்திற்கு வெளியேயும் ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் ஏராளமான போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாளை (7ம் தேதி) கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளை மறுநாள் (8ம் தேதி) மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது.
நிருபர் Mist ராஜா
Comments
Post a Comment