மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நாச்சிமுத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 





அமைச்சர் சி.வி.கணேசன் 1027 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் 

பொள்ளாச்சி;-நவ-28 கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்;ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பலவகை தொழில்நுட்ப கல்லுரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு,  தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார். இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உதவி ஆட்சியர்(பயிற்சி) சௌமியாஆனந்த்  தொழிலக பாதுகாப்பு துறை இயக்குநர் செந்தில், பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) ஒ.செ.ஞானசேகரன், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் கருணாகரன்,  பொள்ளாச்சி மகாலிங்கம் கல்வி குழுமம் தலைவர் ம.மாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில்  5,567 பெண்கள், 3,712  ஆண்கள் எனமொத்தம் 9,279 நபர்கள் கலந்துகொண்டனர். 232 வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. 3 மாற்றுத்திறனாளிகள், 2 திருநங்கைகள் உட்பட 1027 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.   மேலும், 84 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி, 138 பேர் சுய வேலைவாய்ப்பு பெறுவதற்கும் , 23 பேர் போட்டி தேர்வுகளுக்கு பயில்வதற்கு பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இம்முகாமில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  தெரிவித்ததாவது,
 தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,10,760 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளன. சென்னை , புதுக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில்  தமிழக முதல்வர் அவர்கள் ஒரு இலட்சமாவது வேலைவாய்ப்பு ஆணையினை வழங்கினார்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்பினை பெற்று வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
 68வது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்;பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. 
நிறைய மாணவர்கள் இளங்கலை கல்லூரி படிப்பினை  முடித்துவிட்டு வேலை வாய்ப்பிற்காக காத்து இருக்கிறார்கள். இவர்களுக்காகவே , நான் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார்கள்.  இத்திட்டத்தின் கீழ் நான் முதல்வன் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த போர்ட்டல் பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.  எங்கு படிக்கவேண்டும், எதை படிக்கவேண்டும், எப்படி படிக்கவேண்டும், எந்த பயிற்சி நிறுவனத்தில் படிக்கவேண்டும். இதில் உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் என்ற முழுவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
தமிழக முதல்வர் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையுடன் இருங்கள், விடாமுயற்சியோட செயல்படுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்,  நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள், நிச்சயம் வெற்றிபெறுவீர்கள்.  வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,சி.வி.கணேசன்  தெரிவித்தார்.
                         நிருபர் Mist ராஜா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்