மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தாட்கோ மானிய கடனுதவி குறித்து பேட்டி

 


கோவை;-ஜூலை-17 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் தாட்கோ ( தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) மூலம் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 30 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவியும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு நில வளம் மேம்படுத்துதல், பம்பு செட் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல் முறை நீர் பாசனம் அமைத்தல் ஆகியவற்றிற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. 

     தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 60 வயதிற்கு மேற்படாத ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதிதிராவிட தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற 18 முதல் 35 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மகளிர் கடனுதவி அளிக்கும் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

     தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மேற்கண்ட திட்டங்களில் பயன் பெற ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த மக்கள் தங்கள் விண்ணப்பங்களை application.tahdco.comபழங்குடியின வகுப்பை சார்ந்த மக்கள் தங்கள் விண்ணப்பங்களை fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுஅந்தந்த திட்டங்களுக்கான அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுக்களின் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கும் வங்கிகளின் ஒப்புதல் பெற்றவுடன் அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

     கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் (2021-2022) ஆண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.66.96 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.23 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 34 நபர்களுக்கு ரூ.56.36 இலட்சம் மானியத்துடன் கூடிய 1.87 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் கழகம் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.250 கோடி கடனுதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு ரூ.198 கோடி மானியத்துடன் கூடிய ரூ.6.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

      மேலும், (2022-2023) நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வாங்குதல் மற்றும் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 18 நபர்களுக்கு ரூ.49.50 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.165 கோடி கடனுதவியும், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 156 நபர்களுக்கு ரூ.2.16 கோடி மானியத்துடன் கூடிய ரூ. 5.20 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 114 நபர்களுக்கு ரூ.2.16 கோடி மானியத்துடன் கூடிய ரூ.7.20 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 696 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.144 கோடி மானியத்துடன் கூடிய ரூ.4.80 கோடி கடனுதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு ரூ.6.26 கோடி மானியத்துடன் கூடிய ரூ. 20.85 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவியின் மூலம் மாருதி மகிழுந்து வாகனத்தை வாங்கி வாடகைக்கு ஓட்டி வரும் கோவை மாவட்டம், பட்டணம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (33) தெரிவித்ததாவது, 

     என் பெயர் கார்த்திக். நான் பட்டணம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு ஓட்டுநர் உரிமம் பெற்று தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளத்திற்கு கார் ஓட்டி வந்தேன். மாதம் ‌ரூ.8000/- சம்பளம் கிடைத்தது. எனது வருமானத்தைக்‌ கொண்டு குடும்பத்தை நடத்தி வருவதும், குழந்தைகளை படிக்க வைப்பதும் மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் நானே ஒரு கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தால் அதிக வருமானம் கிடைக்கும். அதன் மூலம் குடும்ப செலவுகளை மேற்கொள்ளுவதற்கும், பிள்ளைகளின் படிப்பு செலவுகள் அனைத்தையும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைத்தேன். 

     ஆனால் கார் வாங்கும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. ஏதாவது ஒரு கடனுதவி பெற்ற கார் வாங்கிடலாம் என்று பல நாட்கள் அலைந்து சிரமப்பட்டேன். எனக்கு யாரும் கடன் கொடுக்க முன் வரவில்லை. மிகுந்த வேதனையோடு இருந்த போது தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவதாக தகவலை அறிந்தேன். தாட்கோ அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டு அறிந்து கொண்டேன். சுசுகி கார் வாங்க விலைப்புள்ளியைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தினை பதிவு செய்தேன். எனக்கு மாருதி மகிழுந்து வாகனத்தை வழங்குவதற்கான கடனுதவி உத்தரவு கிடைக்கப்பெற்றது. தாட்கோ மூலம் 30 சதவீதம் மானியம் அதாவது ரூ.1,70,870, மானியத்தில் ரூ. 5.69,567 கடனுதவியில் கார் வாங்கினேன். தற்போது அதைக் கொண்டு வெளியில் வாடகைக்கு ஓட்டி வருகிறேன். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு வங்கி கடன் செலுத்தியது போக ரூ. 10,000க்கும் அதிகமாக வருமானம் கிடைக்கின்றது. 

     பிறரிடம் கார் ஓட்டுனராக சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த நான் சொந்த காருக்கு உரிமையாளராக ஆக வேண்டுமென்று நீண்ட நாட்கள் கனவு கண்டு வந்தேன். ஏழையான என்னால் எப்படி கார் வாங்க முடியும் என மிகுந்த மன வேதனையோடு பல நாட்கள் வருந்தினேன். எனது கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் தாட்கோ மூலம் மானியத்தில் சொந்த கார் வாங்குவதற்கு உதவி செய்துள்ளார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

    இதன் மூலம் எனக்கு குடும்ப செலவுகள், குழந்தைகளின் படிப்பு செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மேற்கொள்வதோடு மாதந்தோறும் வங்கிக் கடனை முறையாக செலுத்தியது போக சிறு தொகை சேமிப்பாகவும் இருந்து வருகின்றது. எங்களை  போன்ற ஏழைகளையும் தொழில் முனைவோராக தாட்கோ மூலம் மானியத்தில் கடனுதவி வழங்கி எங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட  இத்திட்டத்தை தந்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசிற்கும் எனது சார்பாகவும், குடும்பத்தின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் மானியத்துடன் கூடிய கடனுதவி யின் மூலம் கறவை மாடுகள் வாங்கி பயனடைந்த கோவை மாவட்டம், கரவளி மாதப்பூர் கிராமத்தை சேர்ந்த தி.பார்வதி (37)  என்ற பெண்மணி தெரிவித்ததாவது, 

     என் பெயர் தி. பார்வதி, நான் கரவளி மாதப்பூர் கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் 6 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். ஆகவே என்னால் கூலி வேலை தவிர்த்து மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. நான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலைக்கு செல்வேன். எனது கணவர் பெயர் திருமூர்த்தி. அவர் வாடகை ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களுடைய வேலைகள் அனைத்து நாட்களும் இருக்காத காரணத்தால் தினந்தோறும் வருமானம் கிடைப்பதில்லை. வருமானம் கிடைப்பதில்லை. சாதாரண குடும்பமான எங்கள் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தோம்.

     இதனால் மிகுந்த வேதனையோடு இருந்தேன். அப்பொழுது தான் நாளிதழ்களில் தாட்கோ மூலம் கறவை மாடுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாகவும், அதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வந்தது. நானும் உடனடியாக தாட்கோ அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் முறையையும், தகுதியையும் அறிந்து கொண்டேன். உடனடியாக தாட்கோ இணையதளத்தில் கறவை மாடுகள் வாங்கிட உரிய ஆவணங்களோடு எனது விண்ணப்பத்தினை பதிவு செய்தேன். 

     எனது விண்ணப்பத்தினை பரிசீலித்து ரூ.53,100 மானியம் வழங்குவதோடு வங்கியின் மூலம் ரூ. 1,77,000 கடனும் வழங்குவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். உடனடியாக தாட்கோ மூலம் கிடைத்த கடனுதவியின் மூலம் மூன்று கறவை மாடுகள் வாங்கினேன். கறவை மாடுகள் மூலம் கிடைக்கின்ற பாலை பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகின்றேன். இதன் மூலம் எனக்கு மாதந்தோறும் அனைத்து செலவுகளும் போக ரூ.10,000 யிலிருந்து ரூ.15,000 வரை வருமானம் கிடைக்கின்றது. இதனைக் கொண்டு கடனை முறையாக திரும்ப செலுத்தி வருகின்றேன். எனது கனவை நனவாக்கி தாட்கோ மூலம் மானியத்தில் கடன் வழங்கி உதவிய தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்