மக்கள் வெளிச்சம் நாளிதழ்
அரசு மருத்துவமனையின் அவலம்
பிறந்து 4 நாட்களே ஆன
பச்சிளம் குழந்தை கடத்தல்
பொள்ளாச்சி;-ஜூலை-03பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி குமரன் நகர் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் யூனுஸ். கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திவ்யபாரதி இரண்டாவதாக கர்ப்பமானார். அவரை பிரசவத்திற்காக கடந்த மாதம் 27ம் தேதியன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
29ம் தேதி அன்று அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்த போதிலும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் குழந்தைக்கு அருகிலேயே திவ்யபாரதி அசந்து தூங்கினார். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கண்விழித்தபோது தனது குழந்தையைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்மணி நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கழிவறைக்கு சென்ற போது இரு பெண்கள் உள்ளே வந்து சென்றதாக தெரிவித்துள்ளார். அந்த இரு பெண்கள் தான் திவ்யபாரதியின் குழந்தையை கடத்தி இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
தகவலறிந்து திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செல்வராஜ், வால்பாறை சரக காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், காவலாளி ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
மேலும் அரசு மருத்துவமனை முன்பு உள்ள வணிக வளாகங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment