மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன்
பாதாள சாக்கடை திட்ட பணிகள்
விரைந்து முடிக்க நடவடிக்கை
நகராட்சி கூட்டத்தில் தலைவர் உறுதி
கவுன்சிலர்களின் ஒத்துழைப்புடன் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து
வருவதாக நகராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சித் தலைவர் சியாமளா
நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தாணுமூர்த்தி, துணைத்
தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்களின்
விவாதம்:
துணைத் தலைவர் கவுதம்: நகரட்சி அலுவலகத்தின் முகப்பு, தலைவர் அறை
உள்ளி்ட்ட இடங்களில் நகராட்சிகளின் இலச்சினை (சின்னம்) இடம்பெறவில்லை.
இதற்கு முன்பாக தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் இன்னும்
வைக்கப்படவில்லை. பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட
இடங்களில் தமிழ் வாழ்க என்ற ஒளிரும் பெயர்ப்பலகை இன்னும் வைக்கவில்லை.
இதுபோன்ற சிறு பணிகளைக் கூட நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
விரைவில் இந்த பணிகளை முடிக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை புறக்கணிப்பேன்
என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா: நகரில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை.
காலதாமதமாக வினியோகம், அளவு குறைபாடு, குறிப்பிட்ட நேரம் இன்றி ஏதோ ஒரு
நேரத்தில் வினியோகம் என பல்வேறு குளறுபடிகளால் பொதுமக்கள்
அவதிப்படுகின்றனர்.
கவுன்சிலர் துரைபாய்: கடந்த 2 கூட்டங்களாக வலியுறுத்தி வருகிறேன்.
முன்களப் பணியாளர்களான ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு
பணியாளர்களின் ஊதியத்துக்கு உரிய ரசீது வழங்குவதில்லை. இ.எஸ்.ஐ., பி.எப்.
போன்ற பிடித்தங்கள் முறையாக அந்தந்த அலுவலகங்களில் செலுத்துவதில்லை.
இதுபோன்ற குறைபாடுகள் தொடர்கிறது. இதனை முறைப்படுத்துங்கள் அல்லது
ஒப்பந்ததாரரை மாற்றுங்கள். அதேபோல் ஆயிரத்து 56 குடியிருப்புகள் கொண்ட
எனது வார்டில் 3 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர்.
இந்த 3 பணியாளர்கள் அத்தனை வீதிகளிலும் குப்பைகளை எடுத்து, சாக்கடைகளை
சுத்தம் செய்வது இயலாத காரியம். துப்புரவு பணி, மருத்துவ பணி மற்றும்
அலுவலக பணிகளுக்கும் கூட ஒப்பந்த துப்புரவு பணியாளர்களே
பயன்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக அனைத்து பணிகளிலும் ஆட்கள்
பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
கவுன்சிலர் மணிமாலா: நகராட்சி லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு, பேட்டரி,
டயர் போன்ற பாகங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள். சந்தை விலையை
நாங்களும் விசாரிக்கிறோம். தரமான பொருட்களுக்கு நகராட்சி அதிகாரிகள்
குறிப்பிடும் விலையை விட சந்தை விலை குறைவாகவே உள்ளது. ஆகவே இந்த பணியில்
கூடுதல் கவனம் செலுத்தி நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாதவாறு செயல்பட
வேண்டும்.
கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா: நடைபாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும்
பணியில் பாரபட்சமின்றி செயல்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு
நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் சமுதாய
கழிப்பிடம் கட்டும் பணிக்கு மதிப்பீட்டு விலையை விட அதிக தொகை
கோரியவர்களுக்கு ஒப்பந்தம் அளிக்கிறீர்கள். ஆகவே 20, 21 மற்றும் 22வது
தீர்மானங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்கள் ஆட்சேபணையை
தெரிவித்துக்கொள்கிறோம்.
துணைத் தலைவர் கவுதம்: நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு
விடுவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. நகராட்சிக்கு வருவாய்
கிடைக்கவேண்டும், அதேசமயம் வியாபாரிகளும் சிரமம் இன்றி தொழில் செய்ய
வேண்டும். ஆகவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும்.
கவுன்சிலர் பெருமாள்: பாதாள சாக்கடை திட்ட பணிகள் எனது வார்டில் மிக
மந்தமாக நடைபெறுகிறது. ரோட்டில் நடுவே தோண்டிய குழிகள் இன்னும் சரிவர
மூடப்படவில்லை. அதேபோல் நெருக்கமான குடியிருப்புகள் மிகுந்த எனது
வார்டின் பல வீதிகளி்ல் முறையான ரோடு வசதி இல்லை. இதுபோன்ற காரணங்களால்
வாகனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்கு
ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களில்
மட்டும் இரண்டு பேர் இதுபோன்ற விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். ஆகவே
அதிகாரிகள் இன்னும் அலட்சியமாக இருக்காமல் போர்க்கால அடிப்படையில் எனது
வார்டில் ரோடு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
கவுன்சிலர் நாச்சிமுத்து: கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை
கொண்டு வந்து பொள்ளாச்சியின் அடையாளங்களில் ஒன்றான மாட்டுச் சந்தையை
சிதைத்து விட்டனர். நீதிமன்றம் வரை சென்று அதை மீட்டுள்ளோம். தற்போது
அந்த மாட்டுச் சந்தைக்கு சில பணிகளை செய்ய நகராட்சி நிர்வாகம்
முன்வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொளகிறேன். அதே சமயம் கூடுதல் தொகை
ஒதுக்கி மேலும் சில அத்யாவசிய பணிகளை செய்தால் மாட்டுச் சந்தையில்
வியாபாரம் சிறப்பாக நடைபெறும். அதன் மூலம் நகராட்சிக்கு மேலும் வருவாய்
அதிகரிக்கும்.
கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா: பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளை
சீரமைப்பதில் ராஜாமில் ரோட்டில் பணிகள் மந்தமடைந்துள்ளன. அதிக வாகனங்கள்
மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் ராஜா மில் ரோட்டில்
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கவுன்சிலர் செந்தில்குமார்: எனது வார்டில் வசிக்கும் மக்களை விட
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் ரோட்டில் நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்
பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும்
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டு மேடான
பகுதி என்பதால் சரிவர குடிநீர் கிடைப்பதில்லை. அந்த மக்களுக்கு மாற்று
ஏற்பாடாக பிளாஸ்டிக் தொட்டி வைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பலமுறை
வலியுறுத்தியும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அத்யாவசிய தேவையான
குடிநீர் கூட வழங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலான கவுன்சிலர்களும் தெருவிளக்கு பராமரிப்பில் நகராட்சி
நிர்வாகம் மிகுந்த அலட்சியமாக உள்ளதாக குற்றம்சாட்டினர். நகரின் பல
இடங்கள் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடப்பதாக
புகார் தெரிவித்தனர். மேலும் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் அலட்சியமாக
உள்ள ஒப்பந்ததாரரை மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கவுன்சிலர் சாந்தலிங்கம்: தொடர்ந்து மூன்று கூட்டங்களிலும் வலியுறுத்தி
வருகிறேன். அதே கோரிக்கைகளைத்தான் மீண்டும் கூறுகிறேன். பொள்ளாச்சியை
மாவட்டமாக மாற்ற அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நகராட்சி ஊழியர்களுக்கென குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். வர்த்தக
நிறுவனங்கள் நிறைந்த எனது வார்டில் பெண்கள் அதிகளவில் பணிக்கு வந்து
செல்கின்றனர். ஆகவே அங்குள்ள கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிப்பதை மாற்றி
இலவச கழிப்பிடமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் துரைபாய்: திரு.வி.க. மார்க்கெட்டில் கடைகளை பராமரித்துக்
கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதேபோல் அங்கு
பிரியாணி கடை நடத்தி வந்த சத்தார் என்பவருக்கு மீண்டும் அங்கு கடை நடத்த
அனுமதி அளிக்க வேண்டும். அவர் தி.மு.க. வைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த
அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டே அவரது கடையை அப்புறப்படுத்தினார்கள்
என்று இந்த மன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். தற்போது தி.மு.க.
ஆட்சி என்பதால் மீண்டும் அவருக்கு அங்கு கடை நடத்த வாய்ப்பு அளிக்க
வேண்டும்.
கவுன்சிலர் ஆஜி (எ) இளமாறன்: பாதாள சாக்கடை திட்ட பணியில் வீடுகளுக்கு
இணைப்பு வழங்க அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் வர்த்தக
நிறுவனங்கள் நிறைந்த எனது வார்டில் மருத்துவமனைகள், தியேட்டர்கள்,
ஓட்டல்கள், லாட்ஜ்கள் போன்றவற்றில் முதலில் இணைப்பு வழங்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவை பிரிவில் அலுவலர்களே இல்லை.
பொதுமக்கள் எப்போது வந்தாலும் அந்த பிரிவில் அலுவுலர்கள் இல்லை என்பதால்
ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்: பாதாள சாக்கடை திட்டம்
நகருக்கு அவசியமா இல்லையா என்ற விவாதத்தையும், இதை கடந்த ஆட்சியில்
மக்கள் எதிர்ப்பையும் மீறி கொண்டு வந்துவிட்டார்கள் என்ற வாதங்களையும்
தவிர்ப்போம். நமது ஆட்சியில் அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக
வெளிப்படைத் தன்மையோடு முறையாக நடைபெறும். ஆகவே பாதாள சாக்கடை திட்ட
பணிகளை கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு விரைந்து முடிக்க நடவடிக்கை
எடுக்கப்படும். இதன் மூலம் சாக்கடைகளில் கழிவு நீர் தேங்குதல், அதன்
மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு உருவாதல் போன்றவை முற்றிலும்
தவிர்க்கப்படும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த பணியை விரைந்து
முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment