மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டத்தில்
25 கோயில்களில் குடமுழுக்கு
அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவை மாவட்டத்தில் சுமார் 25 கோயில்கள் ரூ.63 கோடி செலவில் திருப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூர் பட்டீசுவரசுவாமி
கோயிலில் நேற்று மின்கல ஊர்தி சேவையை இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமாரகுருபரன் உட்பட
பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,
இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த ஆண்டு 112 அறிவிப்புகளில் 1,641 பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 165 அறிவிப்புகளில் 2,441 பணிகள் மேற்கொள்ளப்பட
இருக்கின்றது. கோயிலுக்கு வருகை தரும் மாற்று திறனாளிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக 21 மின்கல ஊர்திகள் பல்வேறு கோயில்களில்
இருக்கின்றன. அவைகள் பழுது பார்ப்பதற்கும், கூடுதலாக 13 கோயில்களில் மின்கல
ஊர்தியை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது பெரிய வளாகங்கள் கொண்ட கோயில்களில் ஏற்கனவே உள்ள 22 மின்கல ஊர்திகள் சீரமைக்கப்படும், மேலும் 13 கோயில்களுக்கு மின்கல ஊர்திகள் ரூ.1.5 கோடி செலவில் புதிதாக கொள்முதல்
செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பேரூர் பட்டீசுவரசுவாமி
கோயிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மின்கல ஊர்தி சேவை
தொடங்கப்பட்டுள்ளது. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும்
முதியவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதுபோல் அறிவிப்புகள் அனைத்தும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும்,
கோயில்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஒவ்வொரு திட்டமும்
நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அறிவிப்பு எண் 48ல் அறிவிக்கப்பட்டுள்ள பக்தர்கள் அதிகமாக
தரிசனத்திற்கு வருகின்ற 5 கோயில்களுக்கு மலைப்பாதை அமைப்பதற்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்ய ரூ.1 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். களத்திற்கு
சென்று இந்த ஆய்வினை மேற்கொண்டால்தான் பக்தர்களின் பிரச்சனைகளை களைய
முடிவும். அந்த வகையில் 5 கோயில்களான தேனி மாவட்டம் கண்ணகி
கோயில், போளூர் நரசிம்மர் கோயில், பருவதமலை
மல்லிகார்ஜீனேஸ்வரர் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோயில், அதில்
முதற்கட்டமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், நேரிடையாக ஆய்வு
மேற்கொண்டோம்.
தற்போது பட்டீசுவரசுவாமி கோயிலில் ஆகமவிதிப்படி 12
ஆண்டுகள் முடிவுற்று திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2010 ஆம் ஆண்டிற்கு
பிறகு தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. ரூ.6 கோடி
மதிப்பீட்டில் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் உபகோயிலாக இருக்கின்ற 9 கோயிலையும் சேர்த்து ரூ.12 கோடி செலவில் திருப்பணிகள்
மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சுமார் 25 கோயில்கள் ரூ.63 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட இருக்கின்றது. அந்த
வகையில் இந்த ஆட்சியில் திருப்பணிகளும், குடமுழுக்குகளும், திருத்தேர்களும்,
தெப்பக்குளங்களும், நந்தவனங்களும், சிறந்த முறையில் இருக்கின்றன.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மின்தூக்கி அமைகின்ற
பணிக்கு ரூ.6 கோடி தேவைப்படுகிறது. கோயில் நிதியிலிருந்து மின்தூக்கி பணி
மேற்கொள்ள அடுத்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் கோரப்பட்டு அதற்கான பணி ஆணை
வழங்கப்பட்டு 40 நாட்களில் பணிகள் தொடங்கப்படும். பெருந்திட்டம் தயார் செய்ய அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது. இதில் மடப்பள்ளி, வாகன நிறுத்துமிடம், மலைப்பாதை, மின்தூக்கி
ஆகியவை கொண்டு வரப்படும்.
கடந்த ஆண்டு மட்டும் ரூ.662 கோடி செலவில் திருப்பணிகளுக்கு உத்தரவிடப்பட்டு
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 1500 கோயில்கள் ரூ.1000 கோடி செலவில்
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கோவை மாசாணியம்மன் கோயிலில் தாய்மார்களுக்கு
பாலூட்டும் அறை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதிக பக்தர்கள் வருகை தரும்
கோயில்களில் பாலூட்டும் அறை படிப்படியாக பெரிய கோயில்களில் எவ்வளவு
விரைவாக நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு விரைவாக ஏற்படுத்தி தரப்படும். பக்தர்களின்
தேவைகள் இயன்ற அளவிற்கு நிறைவேற்றி தர இந்து சமய அறநிலையத்துறை பணிகளை
மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment