மக்கள் வெளிச்சம் நாளிதழ்
முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டம்
ரூ.7,730 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
பொள்ளாச்சி;-மே-31 முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டம் தமிழக முதல்வரால் ரூ.7,730 கோடி செலவில் யுனைடெட் இந்திய காப்பீட்டு நிறுவனத்தின் மூலம்
மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சமீரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் பிரசாந்த், துணைத் தலைவர் சங்கர் வானவராயர், இந்திய தொழில் மற்றும் சிஐஐ நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
கோவை மாநகரம் தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்ததாக தொழில் மயமாக்கப்பட்ட நகரமாகும். மேலும் இது வேகமாக வளர்ச்சியடையும் நகரமாகவும்
மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமாகவும் உள்ளது. கோவையின்
பொருளாதாரம் உற்பத்தி மற்றும் சேவைகளை அடிப்படையாக கொண்டது. இது மாநிலத்தின்
மொத்த வருவாயில் 7 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கின்றது. இந்நகரத்தின் பொருளாதார
வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளாக அடிப்படை கட்டுமான வசதிகள் உள்ளன. நாட்டின் 15 சதவீதம் ஜவுளி தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதன் மூலம் தென்னகத்தின்
ஜவுளித்துறையின் முதுகெலும்பாக உள்ளது. மேலும் இந்தியாவின் சரிபாதி மோட்டார் மற்றும்
பம்பு தேவைகளை அளிப்பதன் மூலம் இந்தியாவின் பம்ப் நகரம் எனும் பெயரும் பெற்றுள்ளது.
மேலும் இது வளர்ந்து வரும் மென்பொருள் நகரம் ஆகும். 700க்கும் மேற்பட்ட மாவு அரவை
இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய மாவு அரவை இயந்திர
உற்பத்தியகமாகவும் உள்ளது. தொழிற்சாலை வால்வுகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நகைகள்
மற்றும் கற்கள் உற்பத்தி, தங்க நகை உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலை, வார்ப்பக தொழிலில்
600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரம் டன் தேங்காய் உற்பத்தி என பல்முனைத் தோற்றம் கொண்ட தொழில் நகரமாக விளங்குகிறது.
மிகப்பெரிய பன்னோக்கு மற்றும் உயர்சிறப்பு மருத்துவனைகளை கொண்டிருப்பதன்
மூலம் கோவை மாநகரம் மருத்துவ சேவைகள் துறையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
மருத்துவ சேவைகள் வழங்குவதில் சென்னைக்கு நிகராக முக்கிய பங்கு வகிக்கின்றது.
மருத்துவ சேவைகள் துறை என்பது நமது முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலர்
பொருளாதாரத்தை அடையும் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளது.
நமது அரசின் நாட்டிற்கே முன்னோடி திட்டமான மக்களைத் தேடிமருத்துவம் திட்டத்தின்
கீழ் 70,94,852, முதன் முறை பயனாளிகளும், 1,11,84,374 தொடர் பயனாளிகளும்
பயன்பெற்றுள்ளனர். மேலும், இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 திட்டத்தில், -
68,656 பயனாளிகளுக்கு இதுவரை ரூ.61,88,08,335/- செலவிடப்பட்டுள்ளது. மேலும்,
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் 29.09.2021 அன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில்
தொடங்கப்பட்டு ஆண்டுக்கு 1250 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6
மாதத்திலேயே 1260 முகாம்கள் நடத்தி 9.06 இலட்சம் மக்கள் பயன்பெற்றனர்.
முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டம் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. மீண்டும் 11.01.2022 அன்று தமிழக முதல்வரால் ரூ.7,730 கோடி செலவில் யுனைடெட் இந்திய காப்பீட்டு நிறுவனத்தின் மூலம்
மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 1700
மருத்துவமனைகள் உள்ளன. இதில் அரசு 800, தனியார் 900 மருத்துவமனைகளும்
இணைக்கப்பட்டுள்ளன. இதில் 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன.
இதுவரை 1,12,65,062 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
ரூ.10,388 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சையில் 11,682 பயனாளிகளுக்கு ரூ.938.87 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கிங் இன்ஸ்டியுட் வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர்சிறப்பு
மருத்துவமனை கட்டும் திட்டம் ரூ.250 கோடி செலவில் நமது முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கில மருத்துவம்
மட்டுமல்லாமல் பிற இந்திய மருத்துவ முறைகளின் வளர்ச்சிக்காகவும் நமது அரசு
நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்திய மருத்துவ
முறைகளை பயன்படுத்தி கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கூறிய
திட்டங்கள் மூலம் தமிழக அரசு சீரிய முறையில் மக்களுக்கு சேவைகள் அளித்து வருகிறது.
இத்துடன் இந்திய தொழில் கூட்டமைப்பு அரசிற்கு உறுதுணையாக இருந்து தனது நிதியின் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கியது. 1 இலட்சம் மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தியது. தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தியது.
ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்தது போன்ற செயல்களை செய்துள்ளனர். எனவே, இந்த சேவைகளுக்கு அரசு தனது நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்
கொள்வதோடு இதுபோல் மேலும் சேவைகள் மற்றும் உதவிகள் புரிய மேலும்
பலநிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment