மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பிளாஸ்டிக்குக்கு குட்பை
இனி எங்கும் மஞ்சப்பை
பொள்ளாச்சி;-மே-12 பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சப்பைக்கு முக்கியத்துவம் கொடுக்க பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் தனது பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
மண் வளத்தையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்தது. இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் விழிப்புணர்வு விளம்பரம் என்ற வகையில் மக்கள் வரிப்பணத்தை விரையம் செய்தது மட்டுமே கடந்த ஆட்சியின் சாதனையாகும். இந்நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழலை காக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதன் முதற்கட்டமாக மஞ்சப்பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெருநகரம் முதல் கிராமப்புறம் வரை இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சியாமளா நவநீதகிருஷ்ணன் சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுத்து அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளார். முதற்கட்டமாக நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆணையாளர் தாணு மூர்த்தி, நகர்நல அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரில் உள்ள ஓட்டல் பணியாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் திட்டம் குறித்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறியதாவது, எளிதில் மக்காத மண்வளத்தை பாழாக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதனை செய்யப்படுகிறதா என்பதை நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து பல ஆலோசனைகளை வழங்கி உள்ளோம். உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் பார்சல்களை கட்டுவது ஆகியவற்றில் அரசு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிட அறிவுறுத்தியுள்ளோம். வணிகர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழக முதல்வர் அறிவித்த மஞ்சப்பை திட்டம் வெற்றி பெறும். அதன்மூலம் மட்டுமே சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழித்து நீர் வளத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment