மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் செயல்படும் கயிறு தொழிற்சாலையை
பார்வையிட்ட மத்திய அமைச்சர்


பொள்ளாச்சி;மே-06 பொள்ளாச்சி கயிறு குழுமம் சார்பில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். 
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் பாரம்பரிய
தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம், கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்தவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இத்திட்டம் கயிறு தொழில் சார்ந்த ஊரக தொழில்முனைவோர்கள் மற்றும்
கைவினைஞர்களை குழும (க்ளஸ்டர்) முறையில் ஒருங்கிணைத்து உதவி செய்கிறது.
தமிழ்நாட்டில் 14 கயிறு குழுமங்கள் ரூ. 49.30 கோடி மானியத்துடன் ரூ. 63.06 கோடி
திட்ட செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரத்து 413
பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கயிறு குழுமம் ரூ. 6.5 கோடி மானியத்துடன்
ரூ. 8.88
கோடி திட்ட செலவில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்
அங்கீகரிக்கப்பட்டது. எக்கோ காயர் க்ளஸ்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்  அங்கீகரிக்கப்பட்ட
செயல் நிறுவனமாக இயங்கி வருகிறது. பொள்ளாச்சி குழுமத்தின் பொது வசதி மையத்தில் தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தரைவிரிப்பு, நார்வலை
மற்றும் கயிறு மிதியடி பொருட்கள் தயாரிக்கப் படுகிறது. இக்குழுமத்தின் பொது
வசதி மையம் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உற்பத்தியை துவங்கியது.
இதுவரை விற்றுமுதலாக ரூ.32.33 கோடி ஈட்டியுள்ளது. 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.15.16 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி பகுதியில் இதுவரை சுமார் 3 ஆயிரத்து 350 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம்
கயிறு தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.350ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண ரானே இத்தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது 
கயிறு வாரியத் தலைவர் குப்புராம், கயிறு வாரிய மண்டல இயக்குனர் பூபாலன், எக்கோ காயர் க்ளஸ்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகுமார், துணைத் தலைவர் நாகராஜ், இயக்குனர்கள் வெங்கிடுபதி, ரத்தினம், இளங்கோவன், சேனாதிபதி,  கனகராஜ், கணேஷ் ராமசாமி உட்பட பலர் உடனிருந்தனர். 
தொழிற்சாலையின் நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் பேசுகையில், கொரொனா பரவல் காலகட்டத்தில் நார்த்தொழில் மிகவும் பின்னடைவைச் சந்தித்தது. அதிலும் கொரோனா அதிகம் பாதித்த சீனாவிலிருந்தும், பொருளாதார சரிவால் இலங்கையிலிருந்தும் கன்டெய்னர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செயல்படும் நார் தொழிற்சாலைகள் ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ளன. ஆகவே மத்திய அரசு கன்டெய்னர்கள் தட்டுப்பாட்டிற்கு தீர்வும், நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சேமித்து வைக்க பெரிய அளவிலான குடோன் வசதிகளையும் செய்து கொடுக்க முன்வந்தால் இத்தொழில் நன்கு வளர்ச்சி பெறும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். என்று வலியுறுத்தினர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்