மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நொய்யல் ஆறு மாசுபடும் பிரச்சனைக்கு
விரைவில் உரிய தீர்வு காணப்படும்
சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தகவல்
பொள்ளாச்சி;-மே-25 நொய்யல் ஆறு மாசுபடுவதைத் தடுக்க விரைவில் உரிய தீர்வு காணப்படும் என சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா
தலைமையிலான மதிப்பீட்டு குழுவினர்,
கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தை
மேம்படுத்தும் பணிகள், தெலுங்குபாளையம் ஜெய்நகர் பகுதியில் 24 மணி நேர குடிநீர்
வழங்கும் பணி, வெள்ளலூர் குப்பைகிடங்கு, ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியில்
நொய்யல் ஆறு புனரமைக்கும் பணி, அவினாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல்
உப்பிலிபாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆகிய வளர்ச்சித் திட்ட
பணிகளை
பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மதிப்பீட்டு குழு
உறுப்பினர்களாகிய சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன் (கும்பகோணம்),
ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு),
அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), டி.இராமசந்திரன் (தளி), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்),
ஈ.பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு) எஸ்.ராஜ்குமார் (மயிலாடுதுறை),
அம்மன்.கே.அர்ச்சுணன் (கோவை-வடக்கு), டாக்டர்.தி.சதன்திருமலைக்குமார்
(வாசுதேவநல்லூர்), ப.சிவக்குமார் (எ) தாயகம் கவி (திரு.வி.க.நகர்)
ஆகியோரும், மாவட்ட
ஆட்சியர்.சமீரன், சட்டமன்ற செயலக கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார்,
மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மற்றும் மாநகராட்சி,
நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின், கொடிசியா அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் சட்டமன்ற மதிப்பீட்டுகுழு
தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான மதிப்பீட்டு குழுவினரின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் வாலாங்குளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அவினாசி சாலையில் கோல்ட்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் 10.10 கி.மீ நீளத்தில் உயர்மட்ட மேம்பாலப்பணிகள்
நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப்பாதையாக
அமைய உள்ளது. விமான நிலையம், ஹோப்காலேஜ், நவஇந்தியா, அண்ணாசிலை ஆகிய
நான்கு சந்திப்புகளில் ஏறுதளமும், இறங்கு தளமும் 7 மீட்டர் அகல ஓடுபாதையுடன்
அமையவுள்ளது. கோவை தெற்கு மண்டலம் 76வது வார்டு ஜெயராம் நகரில் அம்ரூட் திட்டத்தின் கீழ்
மேல்நிலைத் தொட்டி மூலம் 1,290 குடிநீர் இணைப்புகளுடன் 23.9கி.மீ புதிய
குழாய்கள் பதிக்கப்பட்டு ஜெயராம் நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பணிகளை ஆய்வு செய்ததோடு, நொய்யல் ஆறு புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம்
பகுதியில் நொய்யல் ஆறு செல்லும் பகுதிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று
வருதையும், வெள்ளலூர் குப்பைகிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய
இடங்களிலும் ஆய்வு
மேற்கொண்டோம்.
மக்களின் வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது, இன்னும் செலவுகளை
கட்டுப்படுத்துவதற்கான வழிகள், திட்டத்திற்கான செலவுகள் சரியான வழியில்
செலவிடப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்வதுதான் மதிப்பீட்டுக்குழுவின் முக்கிய
நோக்கமாகும்.
கோவை மாவட்டத்தில்
இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டதுடன், அனைத்துத்
துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் வரப்பெற்ற
முக்கியமான கோரிக்கைகளான பேருந்து வசதி, நொய்யல் ஆறு மாசுபாடு, குடிநீர்
பிரச்சனை, கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி தொடர்பாக தென்னை விவசாயிகளின்
கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும்.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலப் பணிகள் நிறைவடைய இன்னும் 9
மாதங்களாகும் என தெரிவித்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை
முடிக்க சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜி.என்.மில்ஸ்
மேம்பாலப் பணிகள் நான்கு மாதங்களில் நிறைவடையும். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment