மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் அகழ்வாராய்ச்சி கண்காட்சி
துவக்கி வைத்தார் தமிழக முதல்வர்
பொள்ளாச்சி, மே. 19- கோவையில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கோவை வ.உ.சி.
மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் ஓவியக்கண்காட்சி நடைபெறுகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, தங்கம்தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இக்கண்காட்சியில், தொல்லியல் துறை சார்பில் கீழடி (வைகை
நதிக்கரையில் நகர நாகரிகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல்
(சங்ககாலத் தொழிற்கூடம்), மயிலாடும்பாறை (4200 ஆண்டுகள் பழமையான
இரும்புக் காலப்பண்பாடு) ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சியும், செய்தி மக்கள்
தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய
கண்காட்சியும் 10,000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி வருகிற 25ம் தேதி வரை 7 நாட்கள் தினசரி
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொண்ட அகழாய்வின் போது
கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கி.மு. 1155
எனக்கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண் பொருநை என்று அழைக்கப்பட்ட
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை
அறிவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் உள்ளது. எனவே, தொன்மையான
சமூகத்தின் நாகரிகத்தினை பறை சாற்றும் அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகளை
காண பொதுமக்கள், தமிழ்பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் திரளாக பார்வையிட்டு தெரிந்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment