மக்கள் வெளிச்சம் நாளிதழ்

200 ஆண்டுகளுக்கு முன்பு

உதகை நகரினை கட்டமைத்த 
ஜான் சல்லிவனுக்கு சிலை

திறந்து வைத்தார் முதல்வர் 



உதகை;-மே-21  200 ஆண்டுகளுக்கு முன்பு
உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனின் சிலையை முதல்வர்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில்,
200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த
ஜான் சல்லிவன் என்பவருக்கு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 
மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
ஜான் சல்லிவன் 1788ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகர்
லண்டனில் பிறந்தார். இவரது தந்தை ஸ்டீபன் சல்லிவன், தஞ்சை நகரில்
கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றினார். இவர் முயற்சியால் தஞ்சாவூர் மற்றும் அதனையொட்டி உள்ள இடங்களில் பல ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்கள்
திறக்கப்பட்டன.
ஜான் சல்லிவன் தனது 15வது வயதில் சென்னை கிழக்கிந்திய
நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்து, 1806ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும்
வெளியுறவுத்துறை அமைச்சக தலைமைச் செயலாளரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சகத்தின் உதவியாளராகவும்,
1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ம் ஆண்டு கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
பின்னர்
சல்லிவன் 1815 முதல் 1830ம் ஆண்டு வரை கோயமுத்தூர்
மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். இவரால் 1819ம் ஆண்டு நீலகிரி மாவட்டம்
கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான்
சல்லிவன் 1819ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு
நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசூட் லூயிசுடனும், படுகர்
பழங்குடியினரின் வழிகாட்டுதலுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அப்பகுதியைச் சுற்றிப்பார்த்த இவர் அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்.
நீலகிரியின் முதல் கட்டடமான இக்கல்வீடு இன்றளவும் ஊட்டி அரசு கலைக்
கல்லூரியில் உள்ளது. அதன்பிறகு இப்பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற
எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள்
எளிதில் இப்பகுதியை அணுகிட 1820ம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய
தரைவழிப் பாதையையும் ஏற்படுத்தினார். 
பின்னர், ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல
மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டு, ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும்
உருவாக்கினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.
பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜான் சல்லிவன் 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்று, இங்கிலாந்து திரும்பி, அங்கு தனது
குடும்பத்தினருடன் இறுதி நாட்களைக் கழித்தார். 1855ம் ஆண்டு தனது 66ம்
வயதில் இங்கிலாந்தில் உயிரிழந்தார்.
உதகை நகராட்சியினை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த
பெருமைக்குரிய ஜான் சல்லிவனை நினைவுகூறும் வகையில் உதகை அரசு
தாவரவியல் பூங்கா சாலை முக்கோண வடிவு உள்ள
இடத்தில்
அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலையை 
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்
ஆ.ராசா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
                        நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்