மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோட்டூர் பேரூராட்சியில்
போலீஸ் பாதுகாப்புடன் இறைச்சிக்கடைகள் ஏலம் 


பொள்ளாச்சி;-மே-20 கோட்டூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டன.  
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் செயல்பட்டுவரும் கறிக் கடைகள் மீன் கடைகள் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2022 - 2023ம் நிதியாண்டுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் ஆட்டு இறைச்சி கடைகள், கோழி இறைச்சி கடைகள், மாட்டு இறைச்சி கடை, பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் பேரூராட்சிக்கு ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்து 860 வருவாயாக கிடைத்தது.
ஏலத்தில் கோரப்படாத கடைகள், புதிய கடைகள் ஆகியவற்றுக்கான மறு ஏலம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் (பொறுப்பு) தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்திற்கு முறைப்படி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடியவர்களில் சிலர், சில கடைகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறுகையில், முறையாக ஏலம் எடுத்து பல ஆண்டுகளாக கடை நடத்தி வருபவர்களுக்கு அருகிலேயே புதிய கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி ஏலம் விட்டால் ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் கடுமையாக பாதிப்பார்கள் என்பதற்காகவே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதன் பிறகு அதிகாரிகள் கலந்து பேசி சர்ச்சைக்குரிய நான்கு கடைகளை ஏலம் விட மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மற்ற கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற 6 கடைகளுக்கான ஏலத்தின் மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 400 வருவாயாகக் கிடைத்தது.
                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்