மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்


பொள்ளாச்சி, மே. 19- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து, தொடர் சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தாலும்,  காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற அறப் போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பத்ரகிரி முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட துணைத் தலைவர் நந்தகுமார், நகர தலைவர் செந்தில்குமார், வட்டாரத் தலைவர் பழனிசாமி, காளீஸ்வரன், கராத்தே பஞ்சலிங்கம், ராமகிருஷ்ணன், ராம்ராஜ், சிற்பி  ஜெகதீசன், மெடிக்கல் பாண்டியன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு, கையில் பதாகைகளை ஏந்தியபடி நடைபெற்ற இந்த அறப்போராட்டம் குறித்து மாவட்டத் தலைவர் பகவதி கூறுகையில், நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவும், அனைத்து துறைகளும்  கணினிமயமாவதிலும், நாட்டை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்வதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் அவர் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 
இக்கொலை வழக்கில் கைதாகி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளனை அதே உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க வில்லை. ஆனால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்திருப்பது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்