மக்கள் வெளிச்சம் நாளிதழ்

முதல் போக பாசனத்திற்காக

பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


பொள்ளாச்சி;-மே-16ஆனைமலை வட்டாரத்தில் முதல் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு அமைச்சர் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வட்டாரத்தில் ஆனைமலை, கோட்டூர், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. நடப்பு பருவத்தில் முதல் போகம் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தேவையான தண்ணீரை ஆழியாறு அணையில் இருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தலைமை பொறியாளர் முத்துசாமி, பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர். வரதராஜன், முன்னாள் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. சந்திரசேகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் யுவராஜ், தேவசேனாதிபதி, செட்டிக்காபாளையம் துரை, கோட்டூர் பேரூராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியார் அணையில் இருந்து 5 வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி அணையில் இருந்து 16ம் தேதி முதல் (நேற்று) வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை 152 நாட்களுக்கு ஆயிரத்து 205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பள்ளிவிலங்கால், அரியாபுரம், காரைப்பட்டி, பெரியணை மற்றும் வடக்கலூர் ஆகிய 5 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. 10.24 கி.மீட்டர் தூரம் கொண்ட பள்ளிவிலங்கால் வாய்க்கால் மூலம் 667 ஏக்கர் நிலங்கள், 13.64 கி.மீட்டர் தூரம் கொண்ட அரியாபுரம் வாய்க்கால் மூலம் ஆயிரத்து 243 ஏக்கர் நிலங்கள், 11.22 கி.மீட்டர் தூரம் கொண்ட காரைப்பட்டி வாய்க்கால் மூலம் 806 ஏக்கர் நிலங்கள், 17.90 கி.மீட்டர் தூரம் கொண்ட பெரியணை வாய்க்கால் மூலம் ஆயிரத்து 955 ஏக்கர் நிலங்கள், 10.75 கி.மீட்டர் தூரம் கொண்ட வடக்கலூர் வாய்க்கால் ஆயிரத்து 721 மூலம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 392 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தண்ணீரை சிக்கனமாக செலவிட்டு பாசனம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்