மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ரூ. ஆயிரத்து 500 கோடியில்
 
பி.ஏ.பி. வாய்க்கால்களை சீரமைக்க
தமிழக அரசு ஆலோசனை
 


பொள்ளாச்சி எம்.பி. தகவல்
பொள்ளாச்சி, ஏப். 29 பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உள்ள வாய்க்கால்களை ரூ. ஆயிரத்து 500 கோடியில் முழுமையாக சீரமைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
பரம்பிக்குளம் ஆழயார் பாசனத்திட்டத்தில் ஆழியார் வடிநில பாசன சபைகளுக்கான தலைவர் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 21 சபைகளுக்கான தலைவர் பதவிகளிலும் தி.மு.க. வைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பாசன சங்க நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா, கோட்டூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் பாரமடையூர் அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.
தி.மு.க. ஒன்றிய செயலாளரும், தெற்கு ஒன்றிய கவுன்சிலருமான யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட நமது பகுதியில் விவசாயிகளின் கோரிக்கைகளையும், தேவைகளையும் அறிந்து செயல்பட பாசன சங்க நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க. வைச் சேர்ந்தவர்களாக இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழக முதல்வர் விவசாயிகளின் மீதும், விவசாயத்தின் மீதும் அதிக அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வரின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி சமீபத்தில்தான் கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தியுள்ளோம்.
அதேபோல் இப்பகுதி விவசாயிகளின் உயிர்நாடியான பி.ஏ.பி திட்டத்தில் உள்ள பிரதான மற்றும் கிளை என அனைத்து கால்வாய்களையும் ரூ. ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் முழுமையாக சீரமைக்க தமிழக முதல்வர் தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சித் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அர்த்தநாரிபாளையம் குலோத்துங்கன், செயலாளர் பெரியபோது பத்மநாபன், பொருளாளர் சுப்பேகவுண்டன்புதூர் மோகன்ராஜ், துணைத்தலைவர் தென்சங்கம்பாளையம் அண்ணாதுரை, துணைச் செயலாளர் அங்கலக்குறிச்சி திருஞானசம்பந்தம் ஆகியோருக்கும் எம்.பி. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் ஆனைமலை கிழக்கு பகுதியில் உள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸ் சேவையையும் ஒன்றிய செயலாளர் யுவராஜ் பெரும் முயற்சி எடுத்து ஏற்படுத்தினார். அந்த 108 ஆம்புலன்ஸ் சேவையையும் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்களான செட்டிக்காபாளையம் துரை, தேவசேனாதிபதி, பொள்ளாச்சி நகராட்சி துணைத்தலைவர் கௌதமன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்