மக்கள் வெளிச்சம் நாளிதழ்
ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க
விரைவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
பொள்ளாச்சி எம்.பி. உறுதி
பொள்ளாச்சி;-ஏப்-18ஆனைமலை பகுதியில் ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க விரைவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் முகாமினை துவக்கி வைத்தார். முகாம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிறுத்தம், பூங்கா ஆகியவற்றை எம்.பி. பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியார் ஆற்றில் இருந்து ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் பெறப்படுகிறது.
ஆனால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய மூன்று பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆழியாறு ஆற்றில் கலந்து மாசுபட்டு வருகிறது. மேலும் இப்பகுதி விவசாயிகளும் இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்ததில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மூன்று பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 1.60 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக தெரியவந்துள்ளது. ஆகவே கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரிடம் நேரடியாக கலந்து பேசி விரைவில் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது ஆனைமலை தாசில்தார் பானுமதி, தி.மு.க. ஆனைமலை ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி கவுன்சிலர் அபுதாஹீர் உட்பட பலர் உடனிருந்தனர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment