மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அரசு போக்குவரத்து கழகத்தில்
 
மாற்றுத்திட்டங்கள் இல்லாவிட்டால்
தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்படும்
 
சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பேட்டி
 

பொள்ளாச்சி;-ஏப்-28 மாற்றுத்திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கும் என்று அரசு போக்குவரத்து ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) ஆண்டு பேரவைக் கூட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 10 ஆயிரம் பேருந்தும் நஷ்டமான வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது.
இதனை தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முழுமையாக பணப்பட்டுவாடா செய்யாமல் இருப்பது, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத்தைத் தவிர பிற படிகளை வழங்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். நஷ்டத்தில் இயங்கும் இந்த அரசு போக்குவரத்துக் கழகத்தில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் இது சேவை நோக்கில் செயல்படும் துறை என்பதை நினைவூட்டுகிறோம். மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் தற்போது பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
இந்த இலவச பயணம் என்பதை நஷ்டமாக கருதக்கூடாது. ஒரு நபருக்கு பேருந்து பயணத்திற்காக ரூ. 1 செலவிடுகிறது என்றால் அது மறைமுகமாக ரூ. 4 ஜி.டி.பி. வளர்ச்சிக்கு உதவுவதாக உலக வங்கி கூறுகிறது. மேலும் உலகின் 14 நாடுகளில் அனைத்து தரப்பினருக்கும் பேருந்து பயணம் இலவசம் என்ற திட்டம் தற்போதும் அமலில் உள்ளது. ஆகவே அரசு போக்குவரத்து துறையில் பெட்ரோல் டீசலை மட்டும் நம்பாமல், பயோ டீசல் உற்பத்தி உள்ளிட்ட மாற்று திட்டங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அனைவருக்கும் பேருந்து பயணம் இலவசம் என்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்து வெகுவாக குறையும், குறிப்பாக சுற்றுச் சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும். பனம் பழங்களில் இருந்து அதிகளவில் பயோ டீசல் தயாரிக்கலாம். பனை மரங்கள் வளர்ப்பிற்கு அரசு அதிக கவனம் செலுத்தி, நிதியும் ஒதுக்கிறது. அந்த பனை மரத்தில் இருந்து 18 வகையான பொருட்களை உற்பத்தி செய்யலாம். அதோடு பயோ டீசல் உற்பத்தியிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மாற்றுத்திட்டங்களை கொண்டு வராவிட்டால் அரசு போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். அப்போது வேலை நிறுத்தம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் தற்பேது முதல்வராகிவிட்ட நிலையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
                         நிருபர் ஜெகன்
 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்